வீட்டு மனைப்பட்டா வழங்குவதாக கூறி பண மோசடி - துணை தாசில்தார் கைது


வீட்டு மனைப்பட்டா வழங்குவதாக கூறி பண மோசடி - துணை தாசில்தார் கைது
x
தினத்தந்தி 2 Nov 2018 9:45 PM GMT (Updated: 2 Nov 2018 7:54 PM GMT)

அரசு புறம்போக்கு நிலத்திற்கு வீட்டுமனைப் பட்டா வழங்குவதாககூறி பண மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற துணை தாசில்தாரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை, 

சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ஹக்கீம்ராஜா (வயது 28). இவரிடம் சிவகங்கை அகிலாண்டபுரத்தை சேர்ந்தஅண்ணாதுரை (71) என்பவர் சிவகங்கை பையூரில் வீடு கட்டுவதற்கு, அரசு புறம்போக்கில், நிலம் வாங்கி தருவதாக கூறினாராம். அதற்காக 2½ சென்ட் இடத்திற்கு ரூ.25 ஆயிரம் கட்ட வேண்டும் என்று கூறினாராம். இதை நம்பிய ஹக்கீம்ராஜா உள்பட 5 பேர் கடந்த ஜூன் மாதம் தலா ரூ.25 ஆயிரம் வீதம் கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட அண்ணாதுரை, பெற்ற பணத்திற்கு ரசீது கொடுத்துள்ளார். அந்த ரசீதில் நில ஒதுக்கீட்டு அதிகாரி என்று சீல் வைத்து, கையெழுத்தும் போட்டு தந்துள்ளார்.

அதை பெற்றுக் கொண்ட ஹக்கீம்ராஜா, நீண்ட நாட்களாகியும் அரசு புறம்போக்கில் நிலம் தரப்படாததால், ரசீதுடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அப்போது, அரசு பட்டா வழங்குவது போன்ற திட்டம் எதுவும் இல்லையென்றும், அண்ணாதுரை கொடுத்த ரசீது போலியானது என்றும் தெரிந்தது.

இதையடுத்து சிவகங்கை நகர் போலீசில் கூறப்பட்ட புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் அழகர் வழக்கு பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து ஏராளமான ரப்பர் ஸ்டாம்பு சீல்கள் கைப்பற்றபட்டன.

கைது செய்யப்பட்ட அண்ணாதுரை சென்னையில் துணை தாசில்தாராக பணி புரிந்து கடந்த 2002-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story