தீபாவளி பண்டிகை விடுமுறை: சேலம் பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


தீபாவளி பண்டிகை விடுமுறை: சேலம் பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 3 Nov 2018 4:00 AM IST (Updated: 3 Nov 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால் சேலம் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.

சேலம், 

வருகிற 6-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக் கிழமை) முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு செல்ல தொடங்கிவிட்டனர்.

அதேநேரத்தில் பொதுமக்கள் வசதிக்காக சேலத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள், சேலம் புதிய பஸ்நிலையம் மற்றும் 3 ரோடு அருகேயுள்ள ஜவகர் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதன் காரணமாக புதிய பஸ்நிலையம், 5 ரோடு, 4 ரோடு, சாரதா கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு வாகனங்களும் நீண்ட நேரத்திற்கு பிறகு மெதுவாக ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது. காலை முதல் இரவு வரையிலும் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. திருச்சி, கோவை, திருப்பூர், மதுரை, திருநெல்வேலி, ஈரோடு, வேலூர், கடலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு சென்ற பஸ்களில் பயணிகள் அதிகளவில் பயணம் மேற்கொண்டனர்.

இதேபோல், சேலம் வழியாக வெளியூர்களுக்கு சென்ற ரெயில்களிலும் நேற்று மாலை கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் அதிகளவில் பயணிகள் பயணம் செய்ததை காணமுடிந்தது. காரைக்கால்-பெங்களூரு பயணிகள் ரெயில், சேலம்-கோவை பயணிகள் ரெயில் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

Next Story