டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கொட்டும் மழையில் கலெக்டர் ஆய்வு


டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கொட்டும் மழையில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 3 Nov 2018 4:30 AM IST (Updated: 3 Nov 2018 2:08 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் நடைபெற்ற டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் கணேஷ் கொட்டும் மழையில் நனைந்தவாறு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு உருவாகும் காரணிகளை அழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின்போது நகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் மட்டை, டயர், உள்ளிட்ட தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று புதுக்கோட்டை நகராட்சியின் சார்பில் புதுக்கோட்டை கீழராஜவீதி உள்ளிட்ட பகுதியில் நடைபெற்ற டெங்கு கொசு காரணிகள் அழிக்கும் பணியை கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் கலெக்டர் கணேஷ் பெய்து கொண்டிருந்த கொட்டும் மழையிலும் டெங்கு கொசு ஒழிக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், சாக்கடைகளில் மருந்து அடித்தல், தனிநபர் வீடுகளுக்கு சென்று டெங்குகொசு உருவாகும் காரணிகளை கண்டறிந்து அழித்தல் உள்ளிட்ட பல்வேறு கொசு ஒழிப்பு பணிகளை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

அன்னவாசல் பேரூராட்சி பகுதியில் டெங்கு கொசு உருவாகும் காரணிகளை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேற்று அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் அன்னவாசல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பேரூராட்சி பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு கொசு உற்பத்தி காரணிகளை அழிக்கும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவர், வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள் போன்றவை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். இதில் பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னவாசல் பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

கறம்பக்குடி பகுதியில் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து கறம்பக்குடி பகுதியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அதிகாரி நலதேவன், வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தலைமையில், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் துரைமாணிக்கம் ஆகியோர் தனித்தனி குழுவாக பிரிந்து வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.

அப்போது வீடுகளில் டெங்கு கொசு உற்பத்தி காரணிகளை கண்டறியப்பட்டால், அவற்றை அழித்து, சுகாதாரமான முறையில் வீட்டின் சுற்று பகுதிகளை பராமரிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். மேலும் ஆய்வின்போது தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யாமல் வைத்திருந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கறம்பக்குடி பகுதியில் சுகாதாரத்துறையினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

Next Story