துணிநூல் பதனிடும் ஆலையில் போனஸ் கேட்டு தொழிலாளர்கள் திடீர் முற்றுகை


துணிநூல் பதனிடும் ஆலையில் போனஸ் கேட்டு தொழிலாளர்கள் திடீர் முற்றுகை
x
தினத்தந்தி 2 Nov 2018 9:30 PM GMT (Updated: 2 Nov 2018 8:45 PM GMT)

ஈரோடு துணிநூல் பதனிடும் ஆலை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு, 

ஈரோடு பவானிரோடு அசோகபுரத்தில் தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை உள்ளது. இங்கு நூல் பதனிடுதல், துணி உற்பத்தி உள்ளிட்ட பணிகளில் சுமார் 350 பேர் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் 196 பேர் நிரந்தர பணியாளர்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் நேற்று மாலை ஆலையின் துணை இயக்குனர் அலுவலகத்தில் 10 சதவீதம் போனஸ் மட்டுமே வழங்கப்படும் என்று ‘நோட்டீஸ்‘ ஒட்டப்பட்டது. அதைப்பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தொழிலாளர்கள் அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது உரிய பதில் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று மாலை தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆலையின் முன்பு உட்கார்ந்து திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தொழிலாளர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு துணிநூல் பதனிடும் ஆலை நடப்பு ஆண்டு 50 லட்சம் மீட்டர் துணி கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. ரூ.5 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இதை அறிந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆலை தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் அறிவித்தார். மேலும், தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் ரூ.1,000 தீபாவளி பரிசு வழங்கப்படும் என்று கூறி இருந்தார்.

எனவே நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். இந்தநிலையில் ஆலையின் துணை இயக்குனர் ஆலை நஷ்டத்தில் இயங்குவதாக கூறி 10 சதவீதம் மட்டுமே போனஸ் தருவதாக கூறி நோட்டீஸ் ஒட்டி உள்ளார். இது எங்களுக்கு அதிருப்தியை அளித்து இருக்கிறது. போனஸ் சதவீதம் குறைக்கப்பட்டதால் குறைந்தபட்சம் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூ.8 ஆயிரத்து 400 இழப்பு ஏற்படும். போனசை நம்பி இருக்கும் எங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே நாங்கள் யாரும் போனசை வாங்கவில்லை. எங்களுக்கு வழக்கம்போல 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் அறிவித்தபடி ரூ.1,000 வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story