தீபாவளி கூட்டம் : திருட்டை தடுக்க கேமரா மூலம் கண்காணிப்பு - சாதாரண உடையில் போலீசார் ரோந்து


தீபாவளி கூட்டம் : திருட்டை தடுக்க கேமரா மூலம் கண்காணிப்பு - சாதாரண உடையில் போலீசார் ரோந்து
x
தினத்தந்தி 3 Nov 2018 3:15 AM IST (Updated: 3 Nov 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் தீபாவளி கூட்ட நெரிசலின் போது திருட்டை தடுக்க கேமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும், சாதாரண உடையில் போலீசார் ரோந்து செல்ல இருப்பதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தெரிவித்தார்.

ஊட்டி, 


தீபாவளி பண்டிகை 6-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தீபாவளி பண்டிகை கால விற்பனை களை கட்ட தொடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கோபுரங்களை அமைத்து குற்றச் செயல்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரையில் எஸ்டேட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதல் போக்குவரத்து, மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய உடன் தீபாவளி பண்டிகை கால விற்பனை நடைபெறுவது வழக்கம். இதுதவிர சுற்றுலா தலமாக விளங்கும் ஊட்டிக்கு விடுமுறை காலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதனால் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது தீபாவளி பண்டிகையுடன் தொடர் விடுமுறை காலமும் வருவதால் சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தர தொடங்கி உள்ளனர். இதுதவிர தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்களும் முக்கிய பஜார்களில் குவிந்து வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி வருகிறது. இதைத்தொடர்ந்து குற்றச்செயல்கள் நடைபெறாத வண்ணம் தடுக்கும் வகையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவிட்டார்.

இதனால் ஊட்டி, கூடலூரில் முதன்முறையாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். இதற்காக ஊட்டி கமர்சியல் சாலை, மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதேபோல் கேரளா-கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் பகுதியில் உள்ள கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியிலும் போலீசார் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கூறியதாவது:- தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஜவுளி எடுக்கவும், நகைகள் வாங்க மற்றும் இனிப்பு உள்பட பல்வேறு பொருட்கள் வாங்க கடைகளுக்கு செல்வார்கள். இதனால் கடைவீதி மற்றும் பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். பொதுமக்கள் கூட்டநெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் திருட்டு செயல்களில் ஈடுபடக்கூடும். இதைதடுக்க பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதியில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஊட்டி நகரில் வழக்கத்துக்கு மாறாக 25 ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இதேபோல் மாவட்டம் முழுவதும் 150 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக ஊட்டி, கூடலூர் பகுதியில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட உள்ளது. தீபாவளி திருட்டை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம், அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சாதாரண உடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story