நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது - மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு
நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளை ஊக்குவிக்கும் அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று மத்திய ராணுவ மந்திரி நிர்மலாசீதாராமன் கூறினார்.
கோவை,
பொதுத்துறை வங்கிகளில் உடனடியாக கடன் பெற விண்ணப்பிக்கும் இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி புதுடெல்லியில் நேற்று தொடங்கி வைத்தார். அந்த விழாவை நேரலையாக பார்ப்பதற்காக கோவை மாநகராட்சி கலையரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். இதில் மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு மத்திய அரசு தொடங்கி உள்ள புதிய திட்டங்கள் குறித்து விளக்கி பேசியதாவது:-
நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் 28.7 சதவீதம் சிறு, குறு தொழில்களின் பங்கு இருக்கிறது. மேலும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஏற்றுமதியில் 25 சதவீதம் பங்கு வகிப்பதுடன், உற்பத்தி துறையில் 6 சதவீதம் பங்கு வகிக்கின்றன. சிறு, குறு தொழில்களால் இந்தியாவில் 2 கோடிக்கும் மேலாக தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.
சின்ன சின்ன தொழில்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பதுடன் நாட்டின் இயற்கை வளத்துக்கு உகந்ததாக இருக்கின்றன. பல்வேறு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து அதை நிதித்துறையின் கீழ் கொண்டு வந்து மத்திய அரசின் அனைத்து பலன்களையும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 100 தொழிற்பூங்கா நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழகத்தில் கோவை, திருவள்ளூர், மதுரை, திருச்சி உட்பட 7 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்காகவும், தொழில்முனைவோர்களை பாதுகாக்கவும் 12 வகையான திட்டங்களை பிரதமர் இன்று அறிவித்துள்ளார். இந்த திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்த 1½ மணி நேரத்தில் கோவை் மாவட்டத்தில் மட்டும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களால் 182 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ரூ.47.54 கோடி மதிப்பில் பல்வேறு வங்கிகளின் மூலம் கடன் வழங்க உத்திரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் தொழில் நகரமான கோவை அதிகளவில் வளர்ச்சியடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, ‘தற்போது மும்பை, பெங்களுர் வரை அமையவுள்ள தொழில் வளர்ச்சிக்கான வழித்தடத்தினை கோவை வரை விரிவுபடுத்த வேண்டும். மத்திய அரசால் தேர்ந்தெடுக்க உத்தேசிக்கப்பட்டு உள்ள உலகத்தரம் வாய்ந்த நகரங்களாக உருவாகும் 10 நகரங்களின் பட்டியலில் கோவை மாநகரை பட்டியலில் இணைக்க வேண்டும்’ என்றார்.
விழாவில், மத்திய சுற்றுலா துறை இணை செயலாளர் சுமன் பில்லா, ஏ.பி.நாகராஜன் எம்.பி., அம்மன் கே.அர்ச்சுனன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) துரை ரவிசந்திரன், மாநில வணிக வரித்துறை இணை ஆணையர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, மெட்ராஸ் பெர்ட்டிலைசர்ஸ் இயக்குனர் வானதி சீனிவாசன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், ‘வங்கி கடன் வாங்குவதற்கு உத்தரவாத ஆவணங்கள் கேட்கக்கூடாது. அப்படி கேட்கும் வங்கிகள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசின் எந்த திட்டங்களும் தமிழகத்திற்கு வரவில்லை என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் கூறுகிறார். தமிழக முதல்-அமைச்சர் மூலமாக வந்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ரபேல் போர் விமான பிரச்சினை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்று பேசுகிறார்’ என்றார்.
Related Tags :
Next Story