தீபாவளி பண்டிகையையொட்டி தரைக்கடைகளுக்கு திருவள்ளுவர் மைதானத்தில் இடம் ஒதுக்கீடு


தீபாவளி பண்டிகையையொட்டி தரைக்கடைகளுக்கு திருவள்ளுவர் மைதானத்தில் இடம் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 2 Nov 2018 10:30 PM GMT (Updated: 2 Nov 2018 9:02 PM GMT)

கரூரில் தீபாவளி பண்டிகையையொட்டி தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் விதமாக திருவள்ளுவர் மைதானத்தில் இடம் ஒதுக்கீடு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கரூர், 
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கரூர் ஜவகர்பஜார், செங்குந்தபுரம், கோவை ரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் ஜவுளிகள், பட்டாசு, இனிப்புகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது. இந்த நிலையில் மக்கள் கூட்டம் அதிகம் வரும் அந்த வீதிகளில் தரைக்கடைகள் வைத்து வியாபாரம் செய்தால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை சில்லறை விலையில் விற்பனை செய்யும் தரைக்கடை வியாபாரிகள் தடையின்றி வியாபாரம் செய்யும் வகையில், தற்காலிகமாக அவர்கள் கடை அமைக்க கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அங்கு தரைக்கடை வியாபாரிகள் அமருவதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் கரூர் நகராட்சி சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு குறிப்பிட்ட அளவு ஒதுக்கப்படும் இடத்திற்கு தகுந்தாற்போல வியாபாரிகளிடம் வாடகை வசூலிக்கப்படும். திருவள்ளுவர் மைதான கடைகளில் இன்று (சனிக்கிழமை) முதல் வியாபாரம் தொடங்குகிறது. ஜவுளிகள், அலங்கார பொருட்கள் அனைத்து விதமான பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் கடைகளுக்கு இடம் ஒதுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story