கரூர் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்
கரூர் பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
கரூர்,
கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, மண்மங்கலம், நன்னியூர், வாங்கல் குப்புச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை செய்த தொடங்கி வைப்பது மற்றும் முடிவுற்ற திட்ட பணிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் பூமி பூஜைசெய்து வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அந்த வகையில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில், ரெட்டிபாளையம் பஸ் நிறுத்தம் முதல் பொன்நகர் வரை புதிய திசை மாற்று வடிகால் அமைக்கும் பணியை ரூ.14 லட்சத்திலும், சீனிவாசபுரம் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி ரூ.10 லட்சத்திலும், வேலாயுதம்பாளையம் பகுதியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டது மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி அமைத்து பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணி ரூ.10 லட்சத்திலும் என்பன உள்ளிட்ட பணிகளை தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் மருத்துவர் நகரில் ரூ.8½ லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளிட்ட கட்டிடங்களை திறந்து வைத்து அமைச்சர் பார்வையிட்டார்.
முன்னதாக, பிரேம் மஹாலில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் நடந்த, ஆரோக்கிய உணவு தொடர்பான சைக்கிள் பயண குழுவினரின் விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். சைக்கிள் பயண ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று, சத்தான உணவு பழக்கத்தை மேற்கொள்வது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட அவை தலைவர் ஏ.ஆர்.காளியப்பன், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலகண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், கரூர் நகர செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story