உலக முதலீட்டாளர்கள் கூட்டம்; கலெக்டர் தலைமையில் ஆலோசனை
உலக முதலீட்டாளர்கள் கூட்டம் தொடர்பாக கலெக்டர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
திருச்சி,
உலக முதலீட்டாளர்கள் கூட்டம் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24-ந் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. இதனையொட்டி மாவட்ட அளவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களில் இளம் தொழில் முனைவோர்களை கொண்டு புதிய தொழில்களை உருவாக்கும் பொருட்டும், ஏற்கனவே உள்ள தொழில் நிறுவனங்களை நவீனப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று திருச்சியில் மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய கலெக்டர் ராஜாமணி ‘அடுத்த 2 ஆண்டு காலத்திற்குள் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு ரூ.1,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மாதத்தில் மாவட்ட அளவில் மேலும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெறவுள்ளது. நமது மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கான தகுதி வாய்ந்த தொழில்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். நமது மாவட்டத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் நிறுவனங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்டத் தொழில் மைய பொது மேலாளர் சிதம்பரம், திருச்சி மாவட்ட குறு மற்றும் சிறு தொழில்கள் சங்கத் தலைவர் கனகசபாபதி மற்றும் வங்கி மேலாளர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story