ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 9-வது நாளாக ஆர்ப்பாட்டம் நேற்று கோபி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை துணை தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செலாளர் வெங்கிடு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ஆர்.வெங்கடாசலம் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட கிளை செயலாளர் ஜி.லதா, அங்கன்வாடி ஒன்றிய தலைவர் எஸ்.சாந்தி, செயலாளர் எஸ்.ராஜாமணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் எஸ்.அய்யாசாமி சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் உள்பட திரளான சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதேபோல் டி.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சத்துணவு ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நம்பியூர் வட்டார சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணை தலைவர் சுப்புலட்சுமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர் கோட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், பேரூராட்சி ஊழியர் சங்க உறுப்பினர் ராமலிங்கம், நம்பியூர் வட்டார கிராம உதவியாளர் சங்க தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story