கடலூர் அருகே: லாரி-கார் நேருக்கு நேர் மோதல்; வங்கி மேலாளர் பலி


கடலூர் அருகே: லாரி-கார் நேருக்கு நேர் மோதல்; வங்கி மேலாளர் பலி
x
தினத்தந்தி 3 Nov 2018 3:30 AM IST (Updated: 3 Nov 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வங்கி மேலாளர் பலியானார்.

நெல்லிக்குப்பம், 

திருச்சி உறையூரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 55). இவர் புதுச்சேரியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் மேலாளராக இருந்தார். இதற்காக கடலூர் மஞ்சக்குப்பத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
புகழேந்தி தினசரி தனது காரில், வங்கிக்கு சென்று வந்தார். நேற்று காலை வழக்கம் போல், புகழேந்தி தனது காரில் மஞ்சக்குப்பத்தில் உள்ள வீட்டில் இருந்து வங்கிக்கு புறப்பட்டு சென்றார்.

காலை 9.30 மணிக்கு ரெட்டிச்சாவடியை கடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது புதுச்சேரியில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் நோக்கி லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பெரிய காட்டுப்பாளையம் என்கிற இடத்தில் வந்த போது, காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில், கார் அப்பளம் போல் நொறுங்கி லாரியின் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டது. விபத்து பற்றி தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தொடர்ந்து காரின் இடிபாட்டிற்குள் சிக்கிய, புகழேந்தியை போலீசார் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, லாரிக்கு அடியில் சிக்கிய காரை வெளியே எடுத்து, புகழேந்தியை மீட்டனர். தொடர்ந்து அவரை அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக கடலூர்-புதுச்சேரி சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Next Story