வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெறப்பட்ட மனுக்களை கணினியில் பதிவு செய்யும் பணியை இந்த மாதத்துக்குள் முடிக்க வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பெறப்பட்ட மனுக்களை கணினியில் பதிவு செய்யும் பணியை இந்த மாதத்துக்குள் முடிக்க வேண்டும் கலெக்டர் ராமன் பேச்சு
x
தினத்தந்தி 3 Nov 2018 4:15 AM IST (Updated: 3 Nov 2018 3:42 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய பெறப்பட்ட மனுக்களை கணினியில் பதிவு செய்யும் பணியை இந்த மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என கலெக்டர் ராமன் பேசினார்.

வேலூர், 
வேலூர் மாவட்டத்தில் 4 கட்டங்களாக நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து, தீர்வு காணும் பணியை மேற்கொள்ள இருக்கும் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி பதிவு அலுவலர்கள், தேர்தல் துணைத் தாசில்தார்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் தேர்தல் கணினி இயக்குபவர்களுக்கான பயிற்சி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

பயிற்சியை கலெக்டர் ராமன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:-

வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகிய பணிகளுக்கு கடந்த மாதம் 4 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த முகாம்களில் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து சுமார் 1 லட்சத்து 45 ஆயிரத்து 730 மனுக்கள் பெறப்பட்டன.

அந்த மனுக்களில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரம் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, மீதமுள்ள மனுக்களை பதிவு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பதிவு பணியோடு விண்ணப்பங்களை நேரடியாக ஆய்வு செய்து, உண்மைத் தன்மையை கண்டறியும் பணியையும் வாக்குப்பதிவு அலுவலர்கள், உதவி பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.


இந்த மாதம் இறுதிக்குள் இந்த இரு பணிகளையும் முடிக்க வேண்டும். இந்தப் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஆய்வு பணியின் போது ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து உடனடியாக மனு மீது தீர்வு காண இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. எனவே சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டு ஆய்வு பணியை திறம்பட செய்ய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், உதவி கலெக்டர்கள் மெகராஜ், பிரியங்கா பங்கஜம், இளம்பகவத், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) நாராயணன், தேர்தல் தாசில்தார் பாலாஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story