வடமதுரை போலீஸ் நிலையத்தில்: பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம்
வடமதுரை போலீஸ் நிலையத்தில், பாதுகாப்பு கேட்டு 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தன.
வடமதுரை,
திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சாரங்கா (வயது 23). இவர், டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து விட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜீவா ராஜாத்தி (18). இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் குறித்து ஜீவா ராஜாத்தியின் பெற்றோருக்கு தெரியவரவே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் காதலர்கள் இருவரும் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி திண்டுக்கல்லில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு காதலர்கள் இருவரும் வடமதுரை போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியை சேர்ந்தவர் சண்முகவள்ளி (22). இவர் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு தனியார் நூற்பு மில்லில் வேலை பார்த்து வருகிறார். அவருடன் தென்னம்பட்டியை சேர்ந்த ரமேஷ் (22) என்பவரும் வேலை பார்த்து வந்தார். அப்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதுகுறித்து சண்முகவள்ளியின் பெற்றோருக்கு தெரியவரவே, அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். பெற்றோர் தங்களை பிரித்துவிடுவார்கள் என எண்ணிய காதலர்கள், தங்களது வீட்டை விட்டு வெளியேறி வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு காதலர்கள், வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று தஞ்சமடைந்தனர். போலீசார் 2 காதல் ஜோடி பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story