வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-ரொக்கம் திருட்டு பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை


வியாபாரி வீட்டில் ரூ.3 லட்சம் நகை-ரொக்கம் திருட்டு பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 3 Nov 2018 4:45 AM IST (Updated: 3 Nov 2018 4:24 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடியில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை-ரொக்கம் திருடப்பட்டுள்ளது. தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வாணியம்பாடி, 
வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமதுஆசிப். இவர் தோல் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்களை விற்று வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு வியாபாரம் தொடர்பாக சென்றிருந்தார். பின்னர் திரும்பிவந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்றுபார்த்தபோது பீரோவில் இருந்த 7 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சம் திருடப்பட்டிருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.3 லட்சம் வரை இருக்கும் என தெரிகிறது.

இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் முகமதுஆசிப் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் அங்கு வந்து வீட்டின் கதவு மற்றும் பீரோவில் பதிவான திருடர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

கடந்த வாரம் இதே பகுதியில் நிதிநிறுவன அதிபர் வீட்டில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்றது. ஊழியர் ஒருவர் அதனை தடுக்க முயன்றபோது மர்மநபர்கள் அவரை தாக்கிவிட்டு தப்பினர். பொதுமக்கள் விரட்டியதில் ஒருவர் பிடிபட்டார். அவர் அளித்த தகவலின்பேரில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஒரு வாரத்திற்குள் இப்போது முகமதுஆசிப் வீட்டில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர்சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். எனவே போலீசார் இந்த பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story