குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழில் முனைவோர்களுடன் கலெக்டர் ஆலோசனை


குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழில் முனைவோர்களுடன் கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 3 Nov 2018 5:00 AM IST (Updated: 3 Nov 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்க தொழில் முனைவோர்களுடன் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆலோசனை நடத்தினார்.

நாகர்கோவில், 
தமிழக அரசு வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு“ நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் முதலீட்டை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான ஊக்குவிப்பு கூட்டங்களை தொழில் மையம் மூலமாக நடத்தி வருகிறது.

குமரி மாவட்டத்தில் உள்ள குறு, சிறு தொழில் முனைவோர் “உலக முதலீட்டு மாநாடு 2019“ல் தங்களை பதிவு செய்து பயன் பெறும் வகையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-

வருகிற ஜனவரி மாதத்தில் நடைபெற உள்ள மாநாட்டின் மூலம் குமரி மாவட்டத்தில் 200 கோடி ரூபாய் அளவில் தொழில் முதலீடுகளை ஏற்படுத்தவும், அதன் மூலம் கிராம அளவில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் முனைவோருக்கு மாவட்ட அளவில் அனைத்து உதவிகளையும் செய்ய மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.

ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொழில் முனைவோர் குறை தீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படும். மேலும் புதிய தொழில் முனைவோர் தங்களது பகுதிகளில் அதற்கேற்றவாறு தொழில்களை உருவாக்கிட முன் வர வேண்டும். அதனை பயன்படுத்தி தொழில் முனைவோர், படித்த இளைஞர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன் பெறலாம்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழில் நிறுவன பிரதிநிதிகளின் கருத்துகள் மற்றும் குறைகளை கேட்டறிந்த கலெக்டர், மாவட்ட தொழில் மைய அலுவலர்களிடம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சங்க பிரதிநிதி கங்காதரன், தொழில் அதிபர்கள், தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் புருஷோத்தமன், ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் அருணகிரி, இந்தியன் வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், கனரா வங்கி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராம்குமார், சிட்கோ கிளை மேலாளர் ஆனந்த், தொழில் முதலீட்டு கழக கிளை மேலாளர் சுசீல்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் பெர்பெட் நன்றி கூறினார்.

Next Story