கோவை கடைவீதிகளில் திருட்டை தடுக்க 4 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு


கோவை கடைவீதிகளில் திருட்டை தடுக்க 4 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2018 3:30 AM IST (Updated: 3 Nov 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி கோவை கடைவீதிகளில் திருட்டை தடுக்க 4 உதவி கமிஷனர்கள் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை,

தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவை டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, ராஜவீதி, பெரியகடைவீதி, கிராஸ்கட் ரோடு, ஆர்.எஸ்.புரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடைபெறுவதை தடுக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக கோவை கிழக்கு, கோவை மேற்கு பகுதியில் தலா 2 உதவி கமிஷனர்கள் தலைமையில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவையில் தீபாவளி நெரிசலை பயன்படுத்தி நடக்கும் திருட்டை தடுக்க 4 போலீஸ் உதவி கமிஷனர்கள் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள், 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 300 போலீசார் காலை மற்றும் மாலை நேரங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர ஊர்க்காவல் படை, தேசிய மாணவர் படையினரும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு பகுதிகளில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் இருந்து போலீசார் பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணிக்கிறார்கள். மேலும் அவர்கள் திருட்டை தடுக்கும் விழிப்புணர்வு வாசகங்களை அவ்வப்போது அறிவித்து வருகிறார்கள்.

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக கிராஸ்கட் சாலை, டவுன்ஹால் பகுதியில் நடைபாதைகளில் கயிறு கட்டி பாதசாரிகள் நடந்து செல்ல தனி வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதுதவிர டவுன்ஹால் பகுதியில் ஏற்கனவே உள்ள 35 கண்காணிப்பு கேமராக்களை தவிர கூடுதலாக 30 கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அவை அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு டி.கே. மார்க் கெட்டில் உள்ள கண்காணிப்பு அறையில் இருந்தவாறு போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.

மேலும் டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு ஆகிய பகுதிகளுக்கு வரும் டவுன் பஸ்களில் சாதாரண உடை யில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். திருட்டில் ஈடுபடும் ஆண் மற்றும் பெண்களின் செயல்பாடுகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம். கடைவீதிகளுக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அதிலும் பெண்களை குறிவைத்து இந்த திருட்டு கும்பல் செயல்படும்.

திருட்டில் ஈடுபடுபவர்கள் டவுன் பஸ்சில் ஏறி நோட்டமிடுவார்கள். அந்த பஸ்சில் திருடுவதற்கு ஏற்ற சூழல் இல்லை என்றால் அவர்கள் அடுத்த பஸ் நிறுத்தத்தில் இறங்கி விடுவார்கள். பின்னர் அந்த வழியாக வரும் மற்றொரு பஸ்களில் ஏறி நோட்டமிடுவார்கள். இவ்வாறு டவுன்பஸ்களில் ஏறி, ஏறி இறங்குபவர்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்கும்படி உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story