கோவில்பட்டியில் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு


கோவில்பட்டியில் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Nov 2018 3:00 AM IST (Updated: 3 Nov 2018 8:02 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி, 

கோவில்பட்டியில் கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உண்டியலை உடைத்து திருட்டு 

கோவில்பட்டி காந்தி நகரில் காளியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து 2 மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த இரும்பு உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர். அதன்பிறகு கோவில்பட்டி செண்பக நகரில் உள்ள வீடுகளில் திருடுவதற்காக நடந்து சென்றனர்.

அப்போது அங்கு கோவில்பட்டி மேற்கு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். போலீசாரை கண்டதும், 2 மர்மநபர்களும் தப்பி ஓடினர். உடனே போலீசார் விரட்டிச் சென்று, மர்மநபர்களில் ஒருவரை பிடித்தனர்.

கைது 

விசாரணையில், அவர் தர்மபுரி மாவட்டம் கோட்டபட்டியைச் சேர்ந்த சூரன் மகன் பாலகிருஷ்ணன் (வயது 45) என்பதும், காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து பாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய பாலகிருஷ்ணனின் கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன், அவருடைய கூட்டாளி ஆகிய 2 பேரும் சேர்ந்து கோவில்பட்டி காந்தி நகர் காளியம்மன் கோவிலில் 4 வெண்கல குத்துவிளக்குகளை திருடிச் சென்றனர். பின்னர் அவர்கள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோவில்பட்டி கதிரேசன் கோவில் ரோடு மேட்டு காளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

Next Story