சிவகங்கையில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம்
சிவகங்கையில் சேறும் சகதியுமான சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
சிவகங்கை நகர் கல்லூரி ரோட்டில் உள்ள இந்திரா 2-வது தெருவில் உள் சாலை முற்றிலும் சேதமடைந்து, பொதுமக்கள் பயன்படுத்த முடியாதபடி மண் மூடி விட்டது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் நகராட்சி நிர்வத்திற்கு பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
தற்போது மழைக்காலம் என்பதால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்பதால், சாலையில் உள்ள பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த சாலை வழியாக பயணிக்கவே மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிவகங்கை நகரில் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் அந்த பகுதி சேறும், சகதியுமாகி நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு நேரில் சென்று கூறியும்,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதாக அந்த பகுதியினர் புகார் தெரிவித்தனர். இந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நாற்று நடும் போராட்டத்தை நடத்தினர். தகவலறிந்து வந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story