ரூ.70 லட்சத்தில் நல உதவிகள் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்


ரூ.70 லட்சத்தில் நல உதவிகள் அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்
x
தினத்தந்தி 3 Nov 2018 10:30 PM GMT (Updated: 3 Nov 2018 4:58 PM GMT)

சிங்கம்புணரியில் ரூ. 70 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பாஸ்கரன் வழங்கினார்.

சிங்கம்புணரி,
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோவில் மண்டபத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். செந்தில்நாதன் எம்.பி. முன்னிலை வகித்தார். அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வாசு, நகரச் செயலாளர் ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் பாஸ்கரன் ரூ.70 லட்சம் மதிப்பிலான நல உதவிகளை 203 பேருக்கு வழங்கினார்.

முன்னதாக அமைச்சர் பாஸ்கரன் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெறும் உள் மற்றும் வெளிநோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும், டாக்டர்களிடம் டெங்கு பாதிப்புகள் குறித்தும், மருந்துகள் தேவையான அளவு உள்ளதா என்றும் கேட்டறிந்தார். சிங்கம்புணரி பகுதிக்கு சுமார் 25 ஆண்டுகளுக்கு பின்பு பெரியாறு நீட்டிப்பு கால்வாயில், பெரியாறு அணை தண்ணீர் வருவதை பார்வையிட்டார்.

தொடர்ந்து இந்த கால்வாயில் கடைமடை பகுதி வரை தண்ணீர் கொண்டு செல்வதற்காகவும், ஆண்டு தோறும் விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் மேலும் 20 நாட்களுக்கு கால்வாயில் தண்ணீர் வரத்தை நீட்டிக்க அந்த பகுதி விவசாயிகள், அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட அமைச்சர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், துறை சார்ந்த அதிகாரிகள், ஊராட்சி கிளை செயலாளர் ஆபத்தாரணம்பட்டி பிரபு , தொழில் நுட்ப பிரிவு சூரக்குடி சதீஸ்சிலன் உள்பட மாற்றுத்திறனாளிகள், தோட்டகலை, கூட்டுறவு துறை, வேளாண் துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story