தீபாவளி பலகாரங்கள் விற்பனை செய்பவர்கள் உரிமம் பெற வேண்டும் கலெக்டர் வீரராகவராவ் அறிவுறுத்தல்
தீபாவளி பண்டிகைக்கான பலகாரங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தற்போது பண்டிகை காலம் தொடங்கிஉள்ளதால் அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், கார வகைகள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்கள் போன்றவற்றை பொதுமக்கள் விரும்பி வாங்கி உண்பதும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அன்பளிப்பு அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார வகை பலகாரங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006 மற்றும் விதிகள் 2011-ன் கீழ் உரிமம் பெற்று பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
இனிப்பு மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவு பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு, விவரச்சீட்டில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலாவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவு பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொது மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் தங்களது வணிகத்தை பதிவு செய்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும்.
மேலும் இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின், உணவு பாதுகாப்பு துறையை 94440 42322 என்ற எண்ணிலோ அல்லது ராமநாத புரம் மாவட்ட நியமன அலுவலக தொலைபேசி எண்- 04567 231170-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் விவரங்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் நியமன அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story