கோவையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி மர்மகாய்ச்சலுக்கு பெண் சாவு


கோவையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலி மர்மகாய்ச்சலுக்கு பெண் சாவு
x
தினத்தந்தி 4 Nov 2018 4:45 AM IST (Updated: 3 Nov 2018 11:23 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் பலியானார்கள். மர்ம காய்ச்சலுக்கு ஒரு பெண் பரிதாபமாக இறந்தார்.

கோவை,
கோவையில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 வாரத்தில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 15-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு பரிசோதனை செய்து பாதிப்பு இருந்தால் அவர்களை சிறப்பு வார்டில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் தாசப்பன் நகரை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி வசந்தா (வயது 63). இவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் இருந்தது. இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் வசந்தாவின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தனர்.

இதில், அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கடந்த 31-ந் தேதி அனுப்பி வைத்தனர். வசந்தாவை டாக்டர்கள் சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு வசந்தா பரிதாபமாக இறந்தார்.

திருப்பூர் மங்கலம் அருகே உள்ள கணபதிபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (57). கேபிள் டி.வி. ஆபரேட்டர். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அவரை கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கணேசனின் ரத்தத்தை பரிசோதனை செய்ததில் அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை வெறைட்டிஹால் ரோட்டை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் அமுதன் (5). கடந்த சில நாட்களாக சிறுவனுக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்தது.

இதையடுத்து அவனை பெற்றோர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந் தேதி சேர்த்தனர். அங்கு அமுதனின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுவனை சிறப்பு வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுவன் அமுதன் பரிதாபமாக இறந்தான்.

நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பிரபாகரனின் மனைவி சுமித்ரா (35). இவர் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக உறவினர்கள் அவரை கடந்த 30-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்தி ரியில் சேர்த்தனர். அவருக்கு மர்ம காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சுமித்ரா இறந்தார். இதன் மூலம் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு 3 பேரும், மர்ம காய்ச்சலுக்கு ஒரு பெண்ணும் பலியானார்கள். தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 11 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 4 பேரும், மர்ம காய்ச்சலுக்கு 58 பேர் என மொத்தம் 73 பேர் சிகிச்சை பெற்று வருகின் றனர்.

Next Story