ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் திருட்டு; வாலிபர் கைது
ராஜபாளையம் பஸ் நிலையத்தில் நகைக்கடை ஊழியரிடம் ரூ.30 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்,
நெல்லை மாவட்டம் தென்காசி மெயின்ரோட்டில் உள்ள நகைக்கடையில் ஊழியராக வேலை பார்ப்பவர் பாலசுப்பிரமணியன் (வயது 48). இவர் சென்னை சென்று நகை வாங்குவதற்காக கடையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார். இதற்காக ரூ.30 லட்சத்தை ஒரு பையில் எடுத்துக்கொண்டு அரசு பஸ்சில் புறப்பட்டார். தென்காசியில் இருந்து சென்னை செல்லும் அந்த பஸ், நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1½ மணிக்கு ராஜபாளையம் புதிய பஸ் நிலையம் வந்தது.
அங்கு பஸ் நின்றதும் பாலசுப்பிரமணியன் கீழே இறங்கினார். அப்போது பணப்பையை பஸ்சுக்குள்ளேயே வைத்திருந்தார். சிறிதுநேரத்தில் அந்த பையை ஒரு வாலிபர் நைசாக திருடிவிட்டு பஸ்சில் இருந்து இறங்கினார். இதை கவனித்து விட்ட பாலசுப்பிரமணியன், திருடன், திருடன் என கூச்சல் போட்டார். இதைகேட்டதும் பணப்பையுடன் அந்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். ஆனால் அதற்குள் அங்கு நின்ற சக பயணிகள் அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் சேக் முகமது (35) என்பதும், கடையநல்லூர் அருகே உள்ள இடைக்காலை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும் இவருடன் ஹைதர் அலி(40) என்பவரும் வந்துள்ளார். 2 பேரும் சேர்ந்து பாலசுப்பிரமணியன் பயணம் செய்த பஸ்சில் அவரது அருகிலேயே இருந்து பயணித்துள்ளனர்.
தகுந்த நேரம் பார்த்து பணப்பையை அபேஸ் செய்ய திட்டமிட்டு ராஜபாளையம் புதிய பஸ் நிலையத்தில் பாலசுப்பிரமணியன் கீழே இறங்கிறதும் பணப்பையை எடுத்துள்ளனர். ஆனால் சேக் முகமது பிடிபட்டு விட்டார். ஹைதர் அலி தப்பியோடிவிட்டார். இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஹைதர் அலியை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story