விபத்தில் சிக்கியவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுரை


விபத்தில் சிக்கியவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டும் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 4 Nov 2018 4:00 AM IST (Updated: 4 Nov 2018 12:45 AM IST)
t-max-icont-min-icon

விபத்தில் சிக்கியவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டும் என்று நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அறிவுரை கூறினார்.

விழுப்புரம், 
விழுப்புரம்- கடலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவில் பணியாற்றி வரும் போலீசார் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு விழுப்புரம் பணியிடை பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தொடங்கி வைத்து பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் அதிகளவில் சாலை விபத்துகள் நடப்பதால் டி.ஜி.பி. உத்தரவின்படி இந்த பயிற்சி கூட்டம் நடக்கிறது. நெடுஞ்சாலை ரோந்து பணியில் உள்ள போலீசார் மிக கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக நமது மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் நடக்கும் விபத்துகள் அதிகாலையில்தான் நடக்கிறது. எனவே அதிகாலை நேரங்களில் ரோந்து பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஏதாவது சாலையோரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த வாகனத்தினுள் அமர்திருக்காமல் ரோந்து பணியை மேற்கொள்ள வேண்டும்.

அப்போது சாலையோரம் வாகனங்கள் நின்றிருந்தால் அதனை எடுக்கச்சொல்ல வேண்டும். விபத்துகளை தடுப்பதில் நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாரின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். அதே நேரத்தில் விபத்தில் காயமடைந்தவர்களின் உயிரை காப்பாற்றுவதிலும் விரைந்து செயல்பட வேண்டும். முடிந்தவரை போலீசாரே சம்பவ இடத்தில் முதலுதவி செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்காமல் நீங்களே காவல்துறை வாகனத்தில் ஏற்றிச்சென்று அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும். விபத்தில் சிக்கியவர்களுக்கு மனிதாபிமான முறையில் உதவி செய்ய வேண்டும். மேலும் சாலை பாதுகாப்பு குறித்தும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைவரும் எந்தவித புகாருக்கும் இடமளிக்காமல் நேர்மையாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பணியிடை பயிற்சி மைய துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், போக்குவரத்து விதிமுறைகள், விபத்துகளை தடுக்க வேண்டிய பணிகள் குறித்து விளக்கமாக போலீசாருக்கு பயிற்சி அளித்தார்.

Next Story