தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை


தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Nov 2018 4:45 AM IST (Updated: 4 Nov 2018 1:07 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்லடம்,
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அம்மாபாளையம் மீசைக்கார காம்பவுண்டை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி இந்திராகாந்தி (வயது 41). இவர்களுக்கு பெரியநாயகி (23), தாமரைச்செல்வி (21), ரசியா (19) என்ற 3 மகள்கள் உள்ளனர். செல்வராஜ் இறந்து விட்டார்.

பெரியநாயகிக்கு திருமணம் முடிந்து விட்டது. தாமரைச்செல்வி பணப்பாளையத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இதனால் இந்திராகாந்தி தனது இளைய மகள் ரசியாவுடன் வசித்து வருகிறார். ரசியா பல்லடத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்திராகாந்தி குங்குமம்பாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் மாணவி ரசியா அடிக்கடி செல்போனில் யாரிடமோ பேசிக்கொண்டு இருந்தார். இதை தாயார் இந்திராகாந்தி கண்டித்தார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரசியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நீண்ட நேரமாக வீட்டில் விளக்கு எரியாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் அங்கு வந்து வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது அங்கு மாணவி ரசியா தூக்கில் பிணமாக கிடந்தது தெரியவந்தது. பின்னர் கதவை உடைத்து திறந்து உள்ளே சென்றவர்கள் அவரது பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து பல்லடம் போலீசில் தாயார் இந்திரா காந்தி புகார்செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story