சகோதரர் மீது வன்கொடுமை வழக்கு: பெண் தாக்கல் செய்த மனு மீது ஐகோர்ட்டு உத்தரவு
சகோதரர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரிய வழக்கில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த உமாதேவி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
பாளையங்கோட்டை பெரியார் நகரில் உள்ள எனது பெற்றோரின் வீட்டில் முதல் மாடியில் வசிக்கிறேன். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற என் தந்தை 2014-ல் திடீரென இறந்தார். தந்தையின் இறப்புக்கு பின் என் தாயார் வீட்டில் கீழ் தளத்தில் குடியிருந்தேன். இதனிடையே நான் வீட்டின் முதல் தளத்தை காலி செய்து ஒப்படைக்குமாறு சில மாதங்களுக்கு முன்பு எனது சகோதரர் என்னை மிரட்டினார். வலுக்கட்டாயமாக என்னையும், என் குடும்பத்தினரையும் வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது பொருட்களை எனது வீட்டில் வைக்க முயன்றார். நான் அனுமதி மறுத்தேன். தொடர்ந்து என்னிடம் பிரச்சினையில் ஈடுபட்டார்.
இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் அளித்தேன். பின்னர் என் சகோதரர் வீட்டினுள் புகுந்து ஜன்னல் கதவுகளை உடைத்து, என்னிடம் தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டார். இதனால் மீண்டும் புகார் அளித்தேன். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குப்பதிவு செய்தனர். எனவே கோர்ட்டு தலையிட்டு பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட உரிய சட்டப்பிரிவுகளை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கிருஷ்ணன் ஆஜரானார். அப்போது அரசு தரப்பில் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகள் வழக்கில் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கில் உரிய சட்டப்பிரிவுகளை சேர்த்து விசாரணையை தொடர வேண்டும். உரிய பிரிவுகளின் கீழ் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story