மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமா?
கடலூர் மாவட்டத்தில் மேலும் 3 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் கடந்த சில ஆண்டுகளாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக மாவட்ட கலெக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வந்தனர். இதில் சிறப்பாக செயல்பட்டவர் முந்தைய கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே ஆவார். அவர் கடலூர் நகரில் செல்லாத தெருக்களே இல்லை என்று கூறலாம்.
தற்போதும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பரவிவரும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. எனவே நோய் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில், களப்பணிகளை மேலும் முடுக்கி விட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்றிக்காய்ச்சலுக்கு ஒரு இளைஞர் பலியான துயரச்சம்பவம் நடந்தது. இதனால், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடலூருக்கு நேரில் வந்தார். ஆனாலும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணியில் முன்னேற்றம் காணப்படவில்லை. தினமும் புதிது புதிதாக பலர் டெங்கு காய்ச்சலாலும், பன்றிக்காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பரிதாப நிலை காணப்படுகிறது.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள டெங்கு நோயாளிகளுக்கான சிறப்பு வார்டில் நேற்று முன்தினம் 15 டெங்கு நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்று புதிதாக மேலும் 3 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். டெங்கு காய்ச்சலை பொறுத்தவரையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு உள்ளதால் உயிரிழப்பு ஏதும் இல்லை.
ஆனால் பன்றிக்காய்ச்சலை பொறுத்தவரையில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படாததால் கடந்த சிலநாட்களுக்கு முன்பு ஒரு இளைஞர் பலியானார். மேலும் 8 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி மற்றும் சென்னையில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கான களப்பணிகளையும், பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story