சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி


சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி
x
தினத்தந்தி 4 Nov 2018 5:34 AM IST (Updated: 4 Nov 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியானான்.

சேலம்,

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை கே.கே.நகரை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் ரோகித் (வயது 4½). மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் ரோகித், நேற்றுமுன்தினம் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த நிலையில் சேலத்தில் மேலும் ஒரு சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியாகி உள்ளான். இது பற்றிய விவரம் வருமாறு:-

சேலம் அய்யந்திருமாளிகை வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் கண்ணன். இவருடைய மனைவி சுவிதா. இவர்களுக்கு ரித்தீஸ் (வயது 7), ஸ்ரீசாந்த் (4) ஆகிய 2 மகன்கள் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவன் ஸ்ரீசாந்துக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் ஸ்ரீசாந்த் குணமடையவில்லை.

நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது சிறுவனுக்கு காய்ச்சல் அதிகமானதால் மயக்கம் அடைந்தான். இதையடுத்து சிறுவனை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்காக வந்தனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே ஸ்ரீசாந்த் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர், அவர்கள் சிறிது நேரத்தில் சிறுவனின் உடலை வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

மர்ம காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த ஸ்ரீசாந்துக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிறந்தநாள் ஆகும். இதனால் அவனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். இதுதவிர, சிறுவனின் தாய் சுவிதா, பாட்டி சின்னு, சகோதரன் ரித்தீஸ், சித்தப்பா சதீஷ் ஆகிய 4 பேருக்கும் காய்ச்சல் பாதிப்பு உள்ளது.

மர்ம காய்ச்சலால் சிறுவன் உயிரிழந்த தகவல் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்ததை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிறுவன் உயிரிழந்தானா? அல்லது வேறு எந்தவிதமான காய்ச்சல் ஏற்பட்டது? என்பது குறித்து அவனது பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அய்யந்திருமாளிகை பகுதியில் காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் சுகாதார பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி மற்றும் 4½ வயது சிறுவன் உள்பட 5 பேர் இறந்தநிலையில் தற்போது மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story