பழுதடைந்த நிலையில் மின்கம்பங்கள் மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை


பழுதடைந்த நிலையில் மின்கம்பங்கள் மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Nov 2018 10:15 PM GMT (Updated: 2018-11-04T22:58:32+05:30)

குன்றத்தூர் ஒன்றியத்தில் பழுதடைந்த நிலையில் மின் கம்பங்கள் மாற்றியமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வட்டம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பனப்பாக்கம் கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கணபதிபுரம் முதல் பிரதான சாலையின் ஓரமாக உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.

இந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்டுபூச்சு பெயர்ந்து எலும்புக்கூடு போல் காட்சி அளிக்கிறது, இந்த சாலையின் வழியாக கிருஷ்ணாநகர், பாலாஜிநகர், லட்சுமிநகர், எழில்நகர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர்.

மேலும் இதே பகுதிகளில் குறுக்கு தெருக்களில் செல்லும் 2 மின் கம்பங்களும் பழுதடைந்து காணப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளாலும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதால் மக்கள் மிகவும்அச்சத்தில் உள்ளனர்.

மேலும் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் உயிருக்கு பயந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பழுதடைந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story