சுகாதார மேம்பாடு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


சுகாதார மேம்பாடு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 5 Nov 2018 4:15 AM IST (Updated: 4 Nov 2018 10:59 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் சுகாதார மேம்பாடு குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சாரல் அரங்கத்தில் சுகாதார மேம்பாடு குறித்து அரசு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி தலைமை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் லீமா ரோஸ், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோவிந்தன் வரவேற்று பேசினார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் படிக்கும் போது நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பழக்கங்களை குழந்தைகள் பெற்றோரிடம் எடுத்து கூற வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பள்ளிக்கூடங்களில் குடிநீர் சுகாதாரம் மேம்பட வேண்டும். மாணவர்கள் சுத்தமாக இருக்க வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை கைவிட வேண்டும். பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பான குடிநீர், தண்ணீருடன் கூடிய கை கழுவும் வசதி, கழிவு நீரும், குப்பைகளும் அகற்றப்பட வேண்டும். மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும்.

பல பள்ளிக்கூடங்களில் கழிப்பறை வசதி இல்லை. போதுமான தண்ணீர் இல்லை. சுகாதாரம் இல்லாமல் நோய் கிருமிகள் மாணவர்களை தாக்கும் சூழ்நிலை உள்ளது. இதையெல்லாம் எப்படி சரி செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் நோக்கத்தை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு, சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து முதன்மை பயிற்சியாளர் கிருஷ்ணமூர்த்தி, பயிற்சியாளர்கள் தங்கவேல், சுப்புலட்சுமி ஆகியோர் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இதில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story