படப்பை, மணிமங்கலம், வைப்பூர் ஊராட்சிகளில் திட்ட இயக்குனர் ஆய்வு
படப்பை, மணிமங்கலம், வைப்பூர் ஊராட்சிகளில் காஞ்சீபுரம் மாவட்ட திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை முருகாத்தம்மன்பேட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்களுக்கு கடந்த வாரம் மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
படப்பை ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்படுகிறது. ஊராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள், கொசுமருந்து அடிப்பது மற்றும் அங்குள்ள சாலைகளில் பிளச்சிங் பவுடர் தெளிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பெரியார் நகர், முருகாத்தம்மன்பேட்டை போன்ற பகுதிகளில் காஞ்சீ புரம் மாவட்ட திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். பெரியார் நகர் பகுதியில் உள்ள வீடுகளில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் ஏதேனும் உள்ளதா என பார்வையிட்டார்.
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுப்பது குறித்து தகுந்த அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினார். படப்பை பகுதியில் பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பசுமை வீடு மற்றும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெறும் குளங்கள் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
இதனையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலக கட்டிடத்தின் வளாக பகுதியில் தூய்மையாக உள்ளதா? டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் உள்ளதா? என ஆய்வு செய்தார்.
இனையடுத்து மணிமங்கலம், வைப்பூர் போன்ற ஊராட்சிகளிலும் குளம் சீரமைப்பு, மாடுகள் தண்ணீர் குடிக்கும் தொட்டிகள், சிறு மேம்பால பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரபாபு, பாஸ்கரன், ஒன்றிய உதவி பொறியாளர் சுப்புராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபு, ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கவாஸ்கர், படப்பை ஊராட்சி செயலாளர் முகமது ஆரிப், மணிமங்கலம் ஊராட்சி செயலாளர் கோபால், வைப்பூர் ஊராட்சி செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story