மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்வு


மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்வு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 4 Nov 2018 5:54 PM GMT)

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்துள்ளது. இதையொட்டி சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடியும், பாபநாசம் அணை நீர்மட்டம் 9 அடியும் உயர்ந்துள்ளது.

நெல்லை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரவலாக மழை பெய்தது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது. குறிப்பாக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதையொட்டி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள காட்டாறுகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் ஆங்காங்கே தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் ஓடுகிறது. இதில் வினாடிக்கு 1,600 கன அடிக்கு மேல் தண்ணீர் கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய், திருநெல்வேலி கால்வாய், மருதூர் மேலக்கால்வாய், கீழக்கால்வாய், ஸ்ரீவைகுண்டம் தெற்கு கால்வாய்களில் திறந்து விடப்பட்டு உள்ளது.

பாபநாசம் அணை பகுதியில் 154 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இந்த அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 4,748 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பலத்த மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு நேற்று வினாடிக்கு 8 ஆயிரத்து 607 கன அடியாக உயர்ந்தது.

இதனால் நேற்று முன்தினம் 105.60 அடியாக இருந்த பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9.10 அடி உயர்ந்து 114.70 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 701 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


நேற்று முன்தினம் 112.01 அடியாக இருந்த சேர்வாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 15.42 அடி உயர்ந்து நேற்று காலை 127.43 அடியாக அதிகரித்தது. மணிமுத்தாறு அணை பகுதியில் 60 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. இந்த அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 2,877 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து நேற்று 4 ஆயிரத்து 102 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை. இதையொட்டி நேற்று முன்தினம் 89.40 அடியாக இருந்த அணை நீர்மட்டம் 4.40 அடி உயர்ந்து 93.80 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதேபோல் கடனா நதி அணை நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 73.50 அடியாக இருந்தது. இந்த அணைக்கு நீர்வரத்து 644 கன அடியாக உள்ளது. ராமநதி அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 67.25 அடியாக இருந்தது. அணைக்கு 191 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த 2 அணைகளும் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதுதவிர 72 அடி உயரம் கொண்ட கருப்பாநதி அணை நீர்மட்டம் 69.23 அடியாக உள்ளது. இதையொட்டி அணைக்கு வருகிற 300 கன அடி தண்ணீர் முழுமையாக பாசனத்துக்காக வெளியேற்றப்படுகிறது. மேலும் 36.10 அடி உயரம் கொண்ட குண்டாறு அணையும் நிரம்பி விட்டதால் அணைக்கு வருகிற 13 கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. நெல்லையில் நேற்று பகல் முழுவதும் வெயில் அடித்தது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

பாபநாசம் -154, சேர்வலாறு -54, மணிமுத்தாறு -60, கடனா -40, ராமநதி -25, கருப்பாநதி -9.5, குண்டாறு -5, நம்பியாறு -4, அடவிநயினார் -3. அம்பை -10, ஆய்குடி -7, சேரன்மாதேவி -9, நாங்குநேரி -5, பாளையங்கோட்டை -9, ராதாபுரம் -5, சங்கரன்கோவில் -22, செங்கோட்டை -3, சிவகிரி -5, தென்காசி -12, நெல்லை -9.

Next Story