அரசு பஸ்கள் மோதல்: பரமக்குடி சிறுமி உள்பட 2 பேர் பலி - 15 பேர் படுகாயம்


அரசு பஸ்கள் மோதல்: பரமக்குடி சிறுமி உள்பட 2 பேர் பலி - 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 5 Nov 2018 3:30 AM IST (Updated: 4 Nov 2018 11:51 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்கள் மோதியதில் பரமக்குடி சிறுமி உள்பட 2 பேர் பலியாகினர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல், 

தேனியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி வழியாக பழனிக்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. இதேபோல திருப்பூரில் இருந்து தேனிக்கு மற்றொரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இரண்டு பஸ்களிலும் தலா 40 பயணிகள் இருந்தனர். செம்பட்டி அருகே, திண்டுக்கல்-வத்தலக்குண்டு சாலையில் சித்தையன்கோட்டை என்னுமிடத்தில் பஸ்கள் வந்து கொண்டிருந்தன.

அப்போது திருப்பூரில் இருந்து வந்த பஸ், தேனி நோக்கி சென்ற பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் உரசியபடி சென்று சிறிது தூரத்தில் நின்றது. இந்த விபத்தில் 2 பஸ்களின் வலதுப்புறத்தில் உள்ள இருக்கைகள் பலத்த சேதம் அடைந்தன. அதில் இருந்த பயணிகள் சிலர் படுகாயத்துடன் கீழே விழுந்தனர். மற்ற பயணிகளும் பலத்த காயமடைந்ததால் அனைவரும் அலறினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தேனியில் பழனி நோக்கி சென்ற பஸ்சில் பயணம் செய்த, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த தெய்வ நாதன் மகள் ருத்ரா (வயது 6) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாள்.
இதேபோல் அந்த பஸ்சில் பயணம் செய்த 45 வயது பெண் ஒருவரும் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூரில் இருந்து தேனி சென்ற அரசு பஸ்சின் கடைசி இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ஒருவரின் முதுகு பகுதியில் கம்பி குத்தியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் தெய்வநாதனின் மனைவி விஜயராணி (31), மாமியார் அமராவதி (50) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களுக்கு, திண்டுக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்தவுடன் 2 பஸ்களின் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

விபத்தில் பலியான ருத்ராவின் தந்தை பக்ரைன் நாட்டில் வேலை செய்து வருகிறார். தனது தாய் விஜயராணியுடன் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story