டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்


டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 4 Nov 2018 7:07 PM GMT)

சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

சேலம்,
சேலம் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக

ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர், 60 மலேரியா பணியாளர்கள், 60 சுகாதார மேற்பார்வையாளர்கள், 700 கொசுப்புழு கண்டறிந்து நீக்கும் பணியாளர்கள், 65 நகர சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் மழை காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் காலை முதல் இரவு வரை தொய்வின்றி சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வடகிழக்கு பருவமழை காலமான தற்போது பன்றிக் காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் தடுப்பு உள்ளிட்ட தீவிர நோய் தடுப்பு பணிகள் இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் தினந்தோறும் அனைத்து பகுதிகளுக்கும் நேரடியாக சென்று களப்பணிகள் மேற்கொண்டு வருவதால், பணியாளர்களுக்கு தொற்று நோய்களின் தாக்கம் ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இந்தநிலையில், சுகாதார பணியாளர்கள், களப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 4 மண்டலங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி அஸ்தம்பட்டி மண்டல அலுவலகத்தில் நேற்று சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முகாமில், மருத்துவ குழுவினர் மாநகராட்சி சுகாதார பணியாளர்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வழங்கினர். மேலும், சுகாதார பணியாளர்களின் குடும்பத்தினர்களுக்கும் தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்து, தடுப்பூசிகள் போடப்பட்டு, உரிய மருந்துகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர் கோவிந்தன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் செந்தில்குமார், சுகாதார அலுவலர் ரவிச்சந்தர், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், சூரமங்கலம், அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய மண்டல அலுவலகங்களிலும் நேற்று சுகாதார பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

Next Story