சேலத்தில் குழந்தையுடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
சேலத்தில் குழந்தையுடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் நகையை பறிக்க முயற்சி நடந்தது. தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சூரமங்கலம்,
சேலம் இரும்பாலை அருகே உள்ள வட்டமுத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி கிருத்திகாதேவி (வயது 29). இவர் 5 வயது குழந்தையுடன் நேற்று முன்தினம் மொபட்டில் தனது தாயை பார்க்க டவுனுக்கு வந்தார். பின்னர் அவர் தாயாரை பார்த்துவிட்டு வட்டமுத்தாம்பட்டி பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் சோளம்பள்ளம் பகுதியில் கிருத்திகாதேவி சென்றார்.
அப்போது மொபட்டின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் கிருத்திகாதேவி கழுத்தில் அணிந்திருந்த நகையை திடீரென பறிக்க முயன்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் கையில் நகை சிக்கவில்லை. இதில் கிருத்திகாதேவி, அவருடைய குழந்தை நிலைதடுமாறி கீழே விழுந்தனர். பின்னர் அந்த நபர்கள் உடனே அவரிடம் இருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்தனர்.
இதையடுத்து கிருத்திகா தேவி திருடன் திருடன் என சத்தம் போட்டுக்கொண்டு ஓடினார். அதற்குள் அந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இதைத்தொடர்ந்து கீழே விழுந்ததில் காயமடைந்த கிருத்திகாதேவி, அவருடைய குழந்தை ஆகியோரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் அடிக்கடி வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க எந்த போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தினாலே திருட்டு சம்பவங்களை குறைத்து விடலாம். எனவே போலீஸ் உயர் அதிகாரிகள் சூரமங்கலம் பகுதியில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story