தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்


தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கடைவீதியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:00 PM GMT (Updated: 2018-11-05T00:57:57+05:30)

தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் கடைவீதியில் நேற்று பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

சேலம், 
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நகரங்களில் வசித்து வருபவர்கள், தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக தங்களது குடும்பத்தினருடன் ஊர்களுக்கு சென்ற வண்ணமாக இருக்கிறார்கள். சேலம் புதிய பஸ் நிலையத்தில் நேற்று வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்னை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, ஈரோடு, வேலூர் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது.

திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கேரளா, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சென்ற ரெயில்களில் முன்பதிவில்லாத பயணிகளை ரெயில்வே போலீசார் வரிசையில் நிறுத்தி ரெயில் பெட்டிகளில் ஏற்றினர். ரெயிலில் உட்காருவதற்கு இருக்கை கிடைக்காத பலர் நின்று கொண்டே பயணம் செய்த நிலையை பார்க்க முடிந்தது.

இதேபோல் சேலம் மாநகரில் நேற்று கடைவீதியில் தீபாவளி வியாபாரம் படுஜோராக நடந்தது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆண்களும், பெண்களும் தங்களது குடும்பத்தினருடன் ஜவுளி எடுக்க கடைவீதிக்கு வந்திருந்தனர்.

சேலம் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் ஜவுளி மற்றும் இதர பொருட்கள் வாங்குவதற்காக சேலத்திற்கு வந்திருந்தனர். இதனால் கடைவீதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சிறு, சிறு ஜவுளிக்கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடந்தது. குறிப்பாக, சாலையோர தற்காலிக கடைகளும் அதிகளவு காணப்பட்டன. இங்கு சேலை, சுடிதார், குழந்தைகளுக்கு தேவையான துணிகள், பேண்ட், சட்டை, ஜீன்ஸ் போன்ற ஜவுளி வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்தது. பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. முதல் அக்ரஹாரம், கடைவீதி பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மட்டும் செல்ல போலீசார் அனுமதித்தனர். பிற வாகனங்கள் ஆனந்தா பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.

இதேபோல், சேலம் புதிய பஸ்நிலையம், 5 ரோடு, அழகாபுரம் பகுதியிலும் அதிகளவில் ஜவுளிக்கடை செயல்பட்டு வருவதால் அங்குள்ள கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்தது.

போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசாருடன் இணைந்து ஊர்காவல் படை, செஞ்சிலுவை சங்க மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர். மேலும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் போலீசார் அதிகளவு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். பல பகுதிகளில் பொறுத்தப்பட்ட நவீன கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். உயர் போலீஸ் அதிகாரிகளும் வாகனங்களில் வந்து அடிக்கடி ரோந்து பணியில் வந்து கண்காணித்தப்படி சென்றனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் நகரில் பட்டாசு கடைகள் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்தது. குழந்தைகள் பலர் தங்களது பெற்றோரை அழைத்து வந்து பட்டாசுகளை வாங்கி சென்றதை காணமுடிந்தது.

சேலம் மாநகரில் உள்ள இனிப்பு கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தன. இதனால் இனிப்பு கடைகளில் விற்பனை களைக்கட்டியது. மக்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட இனிப்பு மற்றும் கார வகைகளை தங்களது வீடுகளுக்கு வாங்கி சென்றதை காணமுடிந்தது.

Next Story