முதல் கணவருடன் சென்று விடுவேன் என்று கூறியதால் பெண்ணை கொன்று பேரலுக்குள் அடைத்து வைத்த கள்ளக்காதலன் கைது


முதல் கணவருடன் சென்று விடுவேன் என்று கூறியதால் பெண்ணை கொன்று பேரலுக்குள் அடைத்து வைத்த கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 5 Nov 2018 4:45 AM IST (Updated: 5 Nov 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

முதல் கணவருடன் சென்று விடுவேன் என்று கூறியதால் பெண்ணை கொன்று பேரலுக்குள் அடைத்துவைத்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

காமநாயக்கன்பாளையம்

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் சக்திவேலு. இவருடைய மனைவி லதா (வயது 37). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு லதா தனது முதல் கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்து பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் உள்ள நூற்பாலையில் வேலை செய்து வந்தார்.

அப்போது அந்த நூற்பாலையில் வேலை பார்த்த சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. அதை தொடர்ந்து இருவரும் கணவன்-மனைவிபோல் பல்வேறு ஊர்களில் வீடு வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இவர்களுக்கு 3½ வயதில் நித்திகாஸ்ரீ என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பல்லடம் அருகே இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையத்தில் ராமசாமி என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தனர்.

இதற்கிடையில் இவர்கள் குடியிருந்த வீடு சில வாரங்களாக பூட்டிக்கிடந்தது. மேலும் அவர்கள் வாடகையும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ராமசாமி, செந்திலை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் அவருடைய செல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை அதே ஊரை சேர்ந்த வேறு ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தார். இதையடுத்து புதியதாக வீடு வாடகைக்கு எடுத்தவர், கடந்த 1-ந் தேதி அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த பொருட்களை ஒதுங்க வைத்துக்கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் இருந்த பிளாஸ்டிக் பேரலை திறந்து பார்த்தபோது அந்த பேரலுக்குள் லதா கொலை செய்யப்பட்டு அதனுள் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும் துர்நாற்றம் வராமல் இருக்க பேரலின் மேல் பகுதியில் மணல் போட்டு மூடப்பட்டு இருந்தது. இது குறித்து காமநாயகன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று லதாவின் உடலை மீட்டனர். அப்போது லதாவின் தலையின் பின்பகுதியில் ரத்தம் இருந்தது. இதையடுத்து லதா கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் லதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் கள்ளக்காதலன் செந்திலை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று பல்லடம் அருகே பூசாரிபாளையம் பகுதியில் பஸ்சுக்காக காத்து நின்ற லதாவின் கள்ளக்காதலன் செந்திலை போலீசார் கைது செய்தனர்.

கைதான செந்தில் போலீசில் கொடுத்துள்ள பரபரப்புவாக்கு மூலம் வருமாறு:-


நான் கள்ளக்கிணரில் உள்ள நூற்பாலையில் வேலை பார்க்கும் போது, அங்கு வேலை பார்த்த லதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து நாங்கள்இருவரும் கணவன்-மனைவி போல் பல்வேறு ஊர்களில் வீடு வாடகைக்கு எடுத்து குடியிருந்து வந்தோம். இந்த நிலையில் எங்களுக்கு நித்திகாஸ்ரீ என்ற குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் மதுகுடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானேன். மேலும் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தேன். இதை லதா கண்டித்தாள். இதனால் அவளுக்கும், எனக்கு தகராறு ஏற்பட்டது.

அப்போது என்னை விட்டு பிரிந்து முதல் கணவருடன் சென்று விடுவேன் என்றாள். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவத்தன்று அவளை கட்டையால் அடித்து கொன்று விட்டு, யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக அவளுடைய உடலை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் பேரலில் அடைத்து வைத்து, அதன் மேல் பகுதியில் மண்ணை போட்டேன். பின்னர் குழந்தை நித்திகாஸ்ரீயை எடுத்துக்கொண்டு லதாவின் பெற்றோர் வசித்து வரும் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சாவக்காட்டுபாளையம் சென்று லதாவின் தாயாரிடம் விட்டேன். அப்போது லதா கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டதாவும், ஓரிரு நாளில் அவளை சமாதானம் செய்து அழைத்து வந்துவிடுவேன். அதுவரை குழந்தை இங்குஇருக்கட்டும் என்று கூறிவிட்டு தலைமறைவானேன். இந்த நிலையில் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story