கொருக்காத்தூர் அரசு பள்ளிக்கு புதிதாக 4 வகுப்பறைகள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்


கொருக்காத்தூர் அரசு பள்ளிக்கு புதிதாக 4 வகுப்பறைகள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 5 Nov 2018 4:30 AM IST (Updated: 5 Nov 2018 2:18 AM IST)
t-max-icont-min-icon

கொருக்காத்தூர் அரசு பள்ளிக்கு புதிதாக 4 வகுப்பறைகள் கட்டித்தரப்படும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கூறினார்.

செய்யாறு, 
செய்யாறு தாலுகா கொருக்காத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் புதிதாக ரூ.2 லட்சத்து 41 ஆயிரத்தில் நுழைவு வாயில் கட்டப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் தலைமை தாங்கினார். செஞ்சி சேவல் வி.ஏழுமலை எம்.பி., உதவி கலெக்டர் அன்னம்மாள், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) பி.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, நுழைவு வாயிலை திறந்து வைத்தும், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தும் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகம் அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக விளங்கிட வேண்டும் என்கிற நோக்கத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்திய முன்னாள் முதல் - அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தினை முன்னேற்ற பாதையில் வெற்றி நடைபோட்டு செயல்படுகின்றனர்.


கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ தமிழக அரசு இந்த ஆண்டில் ரூ.27 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து, புதுமையான விதத்தில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பெண்களின் முன்னேற்றத்திற்காக திருமண உதவி திட்டம், 50 சதவீத மானியத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.

மாவட்டத்தில் 50 சதவீத மானியத்தில் 3,500 பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் இருந்து புதிதாக 4 வகுப்பறைகள் மற்றும் ஊரகபுற நூலகம் கட்டித்தரப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பள்ளி துணை ஆய்வாளர் எஸ்.புகழேந்தி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சி.செல்வராஜ், நுழைவு வாயில் நன்கொடையாளர் எஸ்.வேலன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை கோமதி நன்றி கூறினார்.

Next Story