தீபாவளியை முன்னிட்டு பூக்கள் கிலோ ரூ.1000-க்கு விற்பனை பொதுமக்கள் அதிர்ச்சி


தீபாவளியை முன்னிட்டு பூக்கள் கிலோ ரூ.1000-க்கு விற்பனை பொதுமக்கள் அதிர்ச்சி
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 8:49 PM GMT)

தீபாவளியை முன்னிட்டு கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. முல்லை, கனகாம்பரம் ஒரு கிலோ ரூ.1000-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கீரமங்கலம்,

தீபாவளி பண்டிகை நாளை(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அப்போது சாமி கும்பிட மற்றும் பெண்களுக்கு பூக்கள் அதிகளவு தேவைப்படும். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள 25 கிராமங்களில் மலர்கள் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் மலர்கள் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலத்தில் உள்ள மலர் கமிஷன் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. அதனை பட்டுக்கோட்டை, திருவாரூர், பேராவூரணி, முத்துப்பேட்டை, நாகை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, அறந்தாங்கி மற்றும் பல ஊர்களில் இருந்து வந்த வியாபாரிகள் வாங்கி செல்வர்.

இந்த பூக்கள் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் அதிக விலைக்கு போகும். அந்த வகையில் நாளை தீபாவளி பண்டிகை என்பதால் நேற்று வியாபாரிகள் பூக்கள் வாங்க கமிஷன் கடைகளுக்கு ஆர்வமுடன் வந்திருந்தனர். ஆனால், கமிஷன் கடைகளில் ஒரு கிலோ முல்லைப் பூ மற்றும் கனகாம்பரம் ரூ.1000-க்கும், மல்லிகை, காட்டுமல்லி ஆகிய பூக்கள் ஒரு கிலோ ரூ.800-க்கும், அரளி ரூ.60-க்கும், ரோஜா ரூ.60-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி சில்லரை விலையில் இன்னும் கூடுதல் விலைக்கு விற்பர். இதனால், ஒரு முழம் பூ ரூ.50-க்கு மேல் விற்ககூடும் என்று தெரிகிறது. பூக்கள் விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story