வந்தவாசி அருகே தனியார் கல்லூரியில் ரூ.2 லட்சம் கொள்ளை காவலாளியை பூட்டிவைத்த கும்பல் தப்பி ஓட்டம்
வந்தவாசி அருகே காவலாளியை தாக்கி அறையில் பூட்டிவிட்டு, கல்லூரியில் இருந்து ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வந்தவாசி,
வந்தவாசி அருகே உள்ள தெள்ளூர் கிராமத்தில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. கல்லூரியில் காவலாளியாக எறும்பூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 57) என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு குணசேகரன் பணியில் இருந்தார். அப்போது 7 பேர் கொண்ட கும்பல் கல்லூரிக்குள் புகுந்து குணசேகரனை தாக்கி கட்டிடத்தின் பின்பகுதியில் உள்ள சமையல் அறையில் அடைத்து வெளிப்புறமாக தாழ்ப்பாள் போட்டனர்.
பின்னர் அந்த கும்பல் கல்லூரி அலுவலக அறை, வகுப்பறை ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து, அலுவலக அறையில் இருந்த பீரோவில் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், மடிக்கணினி, கேமரா ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று காலை வரை சமையல் அறையில் தவித்து கொண்டிருந்த குணசேகரன், அந்த வழியே மாடுகளை ஓட்டிச்சென்ற பெண்ணை ஜன்னல் வழியாக அழைத்து, தான் அடைக்கப்பட்டிருப்பதை தெரிவித்தார். உடனே அந்த பெண் வெளி தாழ்ப்பாளை திறந்தார். அதைத் தொடர்ந்து வெளியே வந்த காவலாளி, இதுகுறித்து கல்லூரி உரிமையாளர் முஜிபுர்ரஹ்மானுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து அவர், வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வந்தவாசி சரக போலீஸ் துணை சூப்பிரண்டு பொற்செழியன், இன்ஸ்பெக்டர் கவுரி, சப் -இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, சந்திரசேகர் மற்றும் போலீசார் கல்லூரிக்கு சென்று விசாரணைமேற்கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story