தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு


தீபாவளி பண்டிகையையொட்டி பூக்களின் விலை 2 மடங்கு உயர்வு
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 2018-11-05T02:47:39+05:30)

தீபாவளி பண்டிகையையொட்டி தஞ்சையில் பூக்களின் விலை 2 மடங்கு உயர்ந்திருந்தது.

தஞ்சாவூர்,

தஞ்சை பூக்காரத்தெருவில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 60 கடைகள் உள்ளன. பூச்சந்தைக்கு ஸ்ரீரங்கம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஓசூர் மற்றும் தஞ்சையை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. பூக்களின் விலையில் அடிக்கடி ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் பெய்த மழையினால் பூக்கள் உற்பத்தியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தஞ்சை பூ மார்க்கெட்டிற்கு பூக்கள் வரத்து குறைந்துள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பூக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

மல்லிகைப்பூ, கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கு நேற்று முன்தினம் விற்பனையானது. நேற்று 2 மடங்கு விலை உயர்ந்து மல்லிகைப்பூ, கனகாம்பரம் ரூ.1,000-க்கும், ரூ.700-க்கு விற்பனையான காட்டுமல்லி ரூ.1,000-க்கு விற்கப்பட்டது. மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து இருந்தது. அரளி ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை யானது. பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டாலும் பூக்களை வாங்கி செல்ல மக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, மழை பெய்தாலே பூக்கள் வரத்து குறைந்துவிடும். செடிகளில் பூத்து இருக்கும் பூக்களுக்கு பூச்சிகளால் பாதிப்பு ஏற்படும். தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 3-ந் தேதி முதல் இன்று(திங்கட்கிழமை) வரை 24 மணிநேரமும் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. பூக்கள் வரத்து குறைவாலும், தீபாவளி பண்டிகையையொட்டியும் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது என்றனர்.

Next Story