எதிர்கோட்டையில்: ரூ.30 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி மையம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்
சாத்தூர் தொகுதி எதிர்கோட்டையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அம்மா உடற் பயிற்சி மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.
தாயில்பட்டி,
சாத்தூர் தொகுதியில் பல்வேறு கிராமங்களில் முடிக்கப்பட்ட வளர்ச்சி திட்ட பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். சாத்தூர் தொகுதி எதிர்கோட்டையில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற் பயிற்சி மையம் திறப்பு விழா கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார். பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பூங்கா மற்றும் உடற்பயிற்சி மையத்தில் போதிய இடவசதி உள்ளது. பூங்கா சிறியவர்களுக்கு விளையாட்டு மைதானமாகவும், நடுத்தர வயதினர்களுக்கு உடற்பயிற்சி மைதானமாகவும், பெரியவர்களுக்கு நடைபயிற்சி மைதானமாகவும் பல பரிமாணங்களில் பயன்படுமாறு அமைக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு இந்த உடற்பயிற்சி மையம், உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியத்தை பேணி காக்கும் உடற்பயிற்சி மைதானமாக அமையும். இங்கு சித்தர்கள் காட்டிய வழிமுறை வடிவிலான நடைபயிற்சி மைதானம் உள்ளதால் இங்கு நடைபயிற்சி மேற்கொள்வதால் உடல்ரீதியான பல பிரச்சினைகளை தீர்ப்பதோடு, மூச்சுப்பயிற்சிக்கும் வழிவகுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் எதிர்கோட்டை மணிகண்டன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராமராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, கூட்டுறவு சங்க தலைவர் குறிஞ்சியார்பட்டி மாரியப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் காளிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story