போராட்டத்தில் ஈடுபட்ட வெல்டர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்


போராட்டத்தில் ஈடுபட்ட வெல்டர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2018 4:30 AM IST (Updated: 5 Nov 2018 3:06 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் ஈடுபட்ட வெல்டர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் ஆலையில் பணியாற்றி வரும் வெல்டர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 2-ந் தேதி முதல் ஒட்டுமொத்தமாக பணிபுறக்கணித்து விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வெல்டர்கள் கலந்துகொள்ளாமல் பணிக்கு சென்று வருகின்றனர்.

வெல்டர்களின் இந்த போராட்டத்தால் பாய்லர் ஆலையில் பணிகள் பாதிக்கப்பட்டது. அதனால் பாய்லர் ஆலை நிர்வாகம் பயிற்சி மாணவர்களையும், ஓய்வு பெற்ற பாய்லர் ஆலை ஊழியர்களையும் வைத்து வெல்டர் பணிகளை செய்ய வைத்தது. மேலும் வெல்டர் தொழிற்சங்கத்தை சேர்ந்த தலைவர், செயலாளர் உள்பட 9 பேரை பணிநீக்கம் செய்ததோடு, மேலும் 14 பேரை வெவ்வேறு மாநிலங்களுக்கு பணியிடம் மாற்றும் செய்தும் ஆலைநிர்வாகம் உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதனை கண்டித்து பாய்லர் ஆலை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பாய்லர் ஆலை வெல்டர் தொழிற்சங்கத்தினர் திருச்சி கலெக்டர் ராஜாமணியை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை மனுவாக அளித்தனர். இருப்பினும், ஆலைநிர்வாகத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே எந்தவித முடிவும் எட்டாமல் ஒருமாதத்திற்குமேல் ஆகிவிட்டது.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பாய்லர் ஆலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவித்துள்ளது. ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வெல்டர்ஸ் தொழிலாளர்களுக்கு மட்டும் போனஸ் அறிவிக்கவில்லை. இதைகண்டித்து நேற்று பாய்லர் ஆலை பயிற்சி மையத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் தொ.மு.ச., அம்பேத்கார் யூனியன், ஏ.டி.பி., பி.எம்.எஸ், சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story