ஒடுகத்தூர் மலைப்பகுதியில் காட்டுப்பூனையை வேட்டையாடிய வாலிபர் கைது 2 பேர் தப்பி ஓட்டம்
ஒடுகத்தூர் மலைப்பகுதியில் காட்டுப்பூனையை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
அடுக்கம்பாறை,
வேலூர் மாவட்ட வனஅலுவலர் பார்கவதேஜா உத்தரவின்பேரில் அமிர்தி வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் வனக்காப்பாளர்கள் சேட்டு, சின்னத்துரை, ராமமூர்த்தி ஆகியோர் நேற்று ஒடுகத்தூர் அருகே முள்ளுவாடி கிராமத்தின் அருகில் உள்ள மலைப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியில் இருந்து புகை வந்தது.
இதனால் சந்தேகமடைந்த வனத்துறையினர் அங்கு சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் 3 பேர் இருந்தனர். அவர்கள் வனத்துறையினர் வருவதை பார்த்ததும் ஓட்டம்பிடித்தனர். வனத்துறையினர் விரட்டிச்சென்றதில் ஒருவரை பிடித்தனர்.
புகைவந்த இடத்தை பார்த்தபோது சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு அரியவகை காட்டுப்பூனையை வேட்டையாடி வைத்திருந்தனர். பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் முள்ளுவாடி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் என்பவருடைய மகன் துரைசாமி (வயது 30) என்பதும், தப்பி ஓடியவர்களில் ஒருவர் அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் என்பதும் காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, சாராயம் காய்ச்சுவது, மரங்களை வெட்டுவது ஆகியவற்றில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து துரைசாமியை வனத்துறையினர் கைது செய்து வாணியம்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் வைத்தனர். வேட்டையாடப்பட்ட காட்டுப்பூனை, மரம் வெட்டுவதற்கு பயன்படுத்திய ஆயுதங்கள், சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய பொருட்கள், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் தப்பி ஓடிய ராஜேந்திரன் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story