தவறான சிகிச்சையால் இளம்பெண் கவலைக்கிடம் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை


தவறான சிகிச்சையால் இளம்பெண் கவலைக்கிடம் தனியார் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 5 Nov 2018 4:30 AM IST (Updated: 5 Nov 2018 3:09 AM IST)
t-max-icont-min-icon

தவறான சிகிச்சையால் இளம்பெண் கவலைக்கிடமாக இருப்பதாக கூறி அந்த பெண்ணின் உறவினர்கள் தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

திருச்சி,

திருச்சி சிந்தாமணி வெனீஸ் நகரை சேர்ந்தவர் ஜான்ஜோசப். இவர் கேட்டரிங் முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெர்மினாள்(வயது 25). இவர்கள் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு பிறகு ஜெர்மினாள் புத்தூர் மீன்மார்க்கெட் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றார்.

அப்போது அவருக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி உள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். இதற்காக அவர் கடந்த சில மாதங்களாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று வந்தார். இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, கர்ப்பப்பையில் சதை வளர்ந்து இருப்பதாகவும், அதனை கரைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அப்போது அவரது உடலில் ரத்தம் ஏற்றியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் மருத்துவமனையில் இருந்து ஜெர்மினாள் வீடு திரும்பினார். அவருக்கு திடீரென குளிர் காய்ச்சல் ஏற்பட்டது. உடனே அவரை மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்துவிட்டு ஆம்புலன்ஸ் மூலம் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்துவிட்டு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறியதால், அங்கிருந்து மேலும் 2 மருத்துவமனைகளுக்கு அவரை கொண்டு சென்று காண்பித்தனர். இதையடுத்து மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள மருத்துவமனையில் ஜெர்மினாளை அனுமதித்தனர்.

அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் ஜெர்மினாளுக்கு முதன்முதலில் சிகிச்சை அளித்த மீன்மார்க்கெட் அருகே உள்ள தனியார் மருத்துவமனை தான் தவறான சிகிச்சை அளித்துவிட்டதாகவும், அதனால் தான் அவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினார்கள். தகவல் அறிந்த அரசு மருத்துவமனை போலீசார் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தவறான சிகிச்சை அளித்ததால் தான் ஜெர்மினாள் உயிருக்கு போராடி வருவதாகவும், இதனால் மருத்துவமனை நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து மருத்துவமனை தரப்பினரோடு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story