நெல்லையில் திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


நெல்லையில் திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 5 Nov 2018 4:00 AM IST (Updated: 5 Nov 2018 3:37 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் முடிந்து 2 ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

பேட்டை, 
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27) கார் டிரைவர். இவருக்கும் கயத்தாறு அருகே உள்ள ஆலாங்குறிச்சியை சேர்ந்த மகாலட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. மகாலட்சுமி அடிக்கடி செல்வக்குமாரிடம் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு மகாலட்சுமி தனது கணவரை பிரிந்து சென்று விட்டார். பின்னர் செல்வக்குமார், மகாலட்சுமியை சமாதானம் செய்து தனிக்குடித்தனம் செல்ல அழைத்து சென்றார்.

அதற்காக நெல்லை பழையபேட்டை நாராயணசுவாமி கோவில் தெருவில் செல்வக்குமார், மகாலட்சுமி ஆகியோர் வாடகை வீட்டில் கடந்த 1½ மாதங்களாக வசித்து வந்தனர். இதற்கிடையே செல்வக்குமார் சம்பவத்தன்று மகாலட்சுமியை கயத்தாறில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால் மகாலட்சுமி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர், மகாலட்சுமியை திட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இதில் மனமுடைந்து காணப்பட்ட மகாலட்சுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த செல்வக்குமார், மகாலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மகாலட்சுமிக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் நெல்லை உதவி கலெக்டர் மணிஸ் நாராணவரே மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

நெல்லை அருகே உள்ள துலுக்கர்குளத்தை சேர்ந்தவர் அருணாசலம். அவருடைய மனைவி மாரியம்மாள் (27). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒரு கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாரியம்மாள் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மாரியம்மாளுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகளே ஆவதால் இதுதொடர்பாக நெல்லை உதவி கலெக்டர் மணிஸ் நாராணவரே விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story