அந்தியூர் அருகே மான் வேட்டையாடிய 4 பேர் கைது இறைச்சி பறிமுதல்


அந்தியூர் அருகே மான் வேட்டையாடிய 4 பேர் கைது இறைச்சி பறிமுதல்
x
தினத்தந்தி 5 Nov 2018 4:15 AM IST (Updated: 5 Nov 2018 3:59 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே மான் வேட்டையாடியதாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தியூர்,
அந்தியூர் அருகே உள்ள கரட்டூர்மேடு என்ற இடத்தில் நேற்று காலை 4 பேர் மானின் இறைச்சியை பங்கு போட்டு கொண்டிருப்பதாக அந்தியூர் வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அவர்களை கண்டதும் 4 பேரும் அங்கிருந்து ஓடினார்கள். உடனே வனத்துறையினர் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், நஞ்சமடைக்குட்டையை சேர்ந்த நவீன்பாபு (வயது 23), கவுந்தப்பாடி அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த தரணீதரன் (27), கரட்டூர்மேடுவை சேர்ந்த பால்ராஜ் (45), எண்ணமங்கலம் கிராமம் செக்போஸ்ட் தோட்டத்தை சேர்ந்த சேகர் (42) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

மேலும் நடத்திய விசாரணையில், அவர்கள் 4 பேரும் தாங்கள் வைத்திருந்த சுருக்கு கம்பியை வைத்து மானை பிடித்துள்ளனர். பின்னர் கரட்டூர்மேடுக்கு மானை கொண்டு சென்று கொன்று அதன் இறைச்சியை பங்கு போட்டு கொண்டதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து மான் வேட்டையாடியதாக 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மான் இறைச்சி 12 கிலோ, டார்ச் லைட், சுருக்கு கம்பி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Next Story