திண்டிவனம் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் பலி - 100 அடி தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்ட பரிதாபம்
திண்டிவனம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள். இவர்கள் காரில் சிக்கி 100 அடி தூரத்துக்கு சாலையில் இழுத்துச்செல்லப்பட்டனர்.
வானூர்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுனன், விவசாயி. இவருடைய மகன் வினோத் என்ற பாலமுருகன் (வயது 23), கட்டிட தொழிலாளி. இவரது நண்பர்கள் அசோகன் (24), ராஜமன்னார் (24). திண்டிவனத்தை அடுத்த வட ஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்களும் கட்டிட தொழிலாளர்கள்.
நேற்று காலை வினோத், அசோகன், ராஜமன்னார் ஆகியோர் சொந்த வேலை காரணமாக திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கு வேலைகளை முடித்துக்கொண்டு மதியம் திண்டிவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பினர்.
புதுச்சேரி - திண்டிவனம் நெடுஞ்சாலையில் இறையானூர் என்ற இடத்தில் சென்றபோது, மரக்காணம் சாலையில் திரும்புவதற்காக நெடுஞ்சாலையின் வலதுபுறமாக சென்றனர். அப்போது சென்னையில் இருந்து புதுவை நோக்கி வேகமாக சென்ற கார் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது.
இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த டிரைவரால், உடனடியாக பிரேக் பிடித்து காரை நிறுத்த முடியவில்லை. இதனால் வினோத், அசோகன், ராஜமன்னார் ஆகியோர் மோட்டார் சைக்கிளுடன் காரில் சிக்கி, சாலையில் தரதரவென சுமார் 100 அடி தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கொடூர விபத்தை சாலையோரம் இருந்து பார்த்தவர்கள், அலறி அடித்து சத்தம்போட்டனர். அதன்பிறகே டிரைவர் காரை நிறுத்தினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வினோத், அசோகன் ஆகியோர் தலை நசுங்கி, கை, கால்கள் சேதமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தனர். ராஜமன்னார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த கிளியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். உடல் சிதைந்து பிணமாக கிடந்த வினோத், அசோகன் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த ராஜமன்னார் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் டிரைவர் லேசான காயமடைந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டிவனம் அருகே நடந்த இந்த கொடூர விபத்து தொடர்பாக கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story