திண்டுக்கல்லில் பரபரப்பு: போலீஸ்காரருக்கு அடி-உதை - அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது


திண்டுக்கல்லில் பரபரப்பு: போலீஸ்காரருக்கு அடி-உதை - அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 4 Nov 2018 10:15 PM GMT (Updated: 4 Nov 2018 11:07 PM GMT)

திண்டுக்கல்லில் போலீஸ்காரரை அடித்து உதைத்த அ.ம.மு.க. பிரமுகர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திண்டுக்கல், 


திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொசவப்பட்டியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 28). இவர், திண்டுக்கல் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தீபாவளி பண்டிகையையொட்டி, நேற்று திண்டுக்கல் சாலை ரோட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தார். அப்போது அவர் சாதாரண உடை அணிந்திருந்தார்.

இந்தநிலையில் பேகம்பூரை சேர்ந்த அபிபுல்லா (40) மற்றும் அவருடைய நண்பர்கள் செய்யது சிராஜுதீன் (22), சேக் அப்துல்லா (20), முகமது ஆசிக் (20) ஆகியோர் 2 மோட்டார் சைக்கிள்களில் அந்த வழியாக வேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை தடுத்து வடிவேல், மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அபிபுல்லா உள்பட 4 பேரும் சேர்ந்து, வடிவேலை கீழே தள்ளி அடித்து உதைத்தனர். வடிவேல், தான் போலீஸ்காரர் என்று கூறிய பின்னரும், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடி வந்து வடிவேலை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அபிபுல்லா, செய்யது சிராஜுதீன், சேக் அப்துல்லா, முகமது ஆசிக் ஆகியோரை கைது செய்தனர். இதில் அபிபுல்லா அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது. திண்டுக்கல்லில் போலீஸ்காரரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story