இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளில் நாளை ஓட்டு எண்ணிக்கை


இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளில் நாளை ஓட்டு எண்ணிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2018 5:00 AM IST (Updated: 5 Nov 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தல் நடைபெற்ற 5 தொகுதிகளில் நாளை(செவ்வாய்க் கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. பகல் 1 மணிக்குள் முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் மண்டியா, பல்லாரி, சிவமொக்கா ஆகிய 3 நாடாளுமன்ற தொகுதிகள், ராமநகர், ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 5 தொகுதிகள் உறுப்பினர் இல்லாமல் காலியாக இருந்தன. இந்த 5 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. பல்லாரி, ஜமகண்டி ஆகிய தொகுதிகளில் காங்கிரசும், மண்டியா, ராமநகர், சிவமொக்கா ஆகிய 3 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் போட்டியிட்டுள்ளன.

மண்டியாவில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் சிவராமேகவுடா, பா.ஜனதா சார்பில் டாக்டர் சித்தராமையா, சிவமொக்கா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் மது பங்காரப்பா, பா.ஜனதா சார்பில் எடியூரப்பா மகன் ராகவேந்திரா, பல்லாரியில் காங்கிரஸ் வேட்பாளராக உக்ரப்பா, பா.ஜனதா வேட்பாளராக சாந்தா, ஜமகண்டியில் காங்கிரஸ் வேட்பாளராக ஆனந்த் நியாமகவுடா, பா.ஜனதா வேட்பாளராக ஸ்ரீகாந்த் குல்கர்னி ஆகியோரும், ராமநகரில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளராக அனிதா குமாரசாமி, பா.ஜனதா சார்பில் சந்திரசேகர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

இதில் ராமநகர் பா.ஜனதா வேட்பாளர் சந்திரசேகர் தேர்தலுக்கு 48 மணி நேரம் இருக்கும்போது, திடீரென போட்டியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். இந்த தேர்தலில் அதிகபட்சமாக ஜமகண்டியில் 81.58 சதவீதமும், குறைந்தபட்சமாக மண்டியாவில் 53.93 சதவீதமும் ஓட்டுகள் பதிவாயின. ஓட்டுகள் பதிவாகியுள்ள மின்னணு எந்திரங்கள் அந்த தொகுதியில் உள்ள ஓட்டு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ‘ஷிப்ட்‘ அடிப்படையில் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்த இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது குறித்து வாக்காளர்கள் ஆர்வமாக விவாதித்து வருகிறார்கள். இந்த கட்சி தான் வெற்றி பெறும் என்று வாக்காளர்கள் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் நகைகள், பொருட்கள், ஆடு, மாடுகளை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் இடைத்தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 1 மணிக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஓட்டு எண்ணும் பணிகளில் 1,248 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வெற்றி பெறும் கட்சிகளுக்கு இந்த இடைத்தேர்தல் முடிவு தீபாவளி பரிசாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும், கர்நாடக கூட்டணி ஆட்சியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஓட்டு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story