டெங்கு, பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


டெங்கு, பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 5 Nov 2018 4:15 AM IST (Updated: 5 Nov 2018 5:02 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு, பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவை, 

கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று மதியம் திடீரென வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு உள்ள டெங்கு, பன்றிக்காய்ச்சல் சிறப்பு வார்டு, இதய நோய் சிகிச்சை பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும், பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேரும் வைரஸ் காய்ச்சலுக்கு 48 பேரும் என மொத்தம் 67 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு, பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முழுமையாக கவனம் செலுத்தி தொற்று நோய்கள் பரவாத வகையில் சிறப்பு நடவடிக்கைகள் குறித்து பட்டியலிடப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் செல்லக்கூடிய இடங்களான கடைவீதி, மார்க்கெட், பஸ்நிலையங்களுக்கு சென்று வீடு திரும்பும்போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கோவை நகரம் சென்னைக்கு இணையாக மருத்துவ தலைநகராக மாற்றப்பட்டு வருகிறது. காய்ச்சல் காரணமாக ஒரு இறப்பு இருக்க கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. லேசான காய்ச்சல் ஏற்பட்டால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வது தான் சரியானது.

சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தீபாவளி விடுமுறை இல்லாமல் மருத்துவர்கள், ஊழியர்களை சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி தீ தடுப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கும் படி அனைத்து அரசு ஆஸ்பத்திரிக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் 24 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். அதுவே இந்த ஆண்டு 2,900 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு, பன்றிக்காய்ச்சலை முழுவதுமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

மழை காலங்களில் பரவக் கூடிய டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களை தடுக்கும் வகையில் உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து பணியாற்றிட முதல்- அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, 300 வீடுகளுக்கு ஒரு சுகாதாரக்குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் 3,665 மருந்து தெளிப்பான்கள், 5,457 புகை பரப்பும் சிறிய எந்திரங்களும், 276 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் எந்திரங்கள் என மொத்தம் 9,398 எந்திரங்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதுவரை 77 இதய அறுவை சிகிச்சைகளும், 1,074 ஆஞ்சியோகிராம்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இங்கு மேலும் ஒரு கேத்லேப் சிகிச்சை கருவி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன், ஜைக்கா திட்டத்தின் மூலம் ரூ.288 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு. ரூ.190 கோடிக்கு மருத்துவ உபகரணங்களும், ரூ.88 கோடிக்கு கட்டிடங்களும் அமைக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) துரை.ரவிச்சந்திரன், அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன், இருப்பிட மருத்துவ அதிகாரி டாக்டர் சவுந்திரவேல், சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, துணை இயக்குனர் பானுமதி, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரி நல்லதம்பி, பப்பாயா ராஜேஷ், கமலக்கண்ணன், ரேஸ்கோர்ஸ் ரகுநாத் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story